Tuesday, November 15, 2011

குருதியில் கருத்து

நண்பா
பாரதம் முடிந்த பாதையின் வழியே
பதினாறாம் நாள் யுத்தம் இன்றும் தொடரும்
பாதி ராத்திரி தூக்கங்கள் கெட்டு
பரிதவிக்கும் காலம் என்று முடியும்

பாவிகள் நாங்கள் நித்திரை விட்டு
பாலகர் அழுகை தேற்றிட விளைவோம்
பாசமாய் வளர்த்த பசுமாடு கன்றுகள்
பாழ் பட்டு போனதே விதியை நொந்தோம்

பாரதி பாடல்கள் பத்து கேட்டாலும்
பாமரர் நாங்கள் அச்சமின்றி அலைவோமோ?
பாணும் குழம்பும் கூட உண்ண வழிஇன்றி
பசிக்கொடுமை நம்மை பாடாய்ப்படுத்தும்

பிள்ளைகள் கதறல் பித்துக்கொள்ள செய்யும்
பிணவாடை மட்டும் தென்றலுடன் வீசும்
புண்பட்ட உடல்களிலிருந்து இன்றோ
ஊண் நீர் வழிகின்றது அருவிபோல்

தசையுருகி என்புகளின் வெளித்தரிசனம்
வயிற்று தசைமட்டும் பின் முதுகுடன்
காதல் செய்து கட்டியனைத்துக்கொள்கிறது
கடைவாயில் நீர் வடிந்து காய்ந்த சுவடுகள்

எழுதி வைக்க தாளின்றி சுவரில் எழுதுகின்றேன்
உண்ணவழி இன்றி எல்லோரும் உண்டதனால்
புதினப்பத்திரிகைகளுக்கு கூட இங்கு பஞ்சம்
புரியாத புதிரான என் வாழ்வோ
மரணத்தின் கீழ் தஞ்சம்

முடிவிலாப் பொருளாக இந்த யுத்தம் தொடரும்
என் சந்ததியாகினும் சுதந்திரகாற்றை
சுவாசிக்கும்
கண்ணீர் பட்டு கரைந்து விடக்கூடாது என்பதற்காக
இருக்கும் சொட்டு குருதியில் எழுதுகின்றேன்
என் கருத்தை .............

No comments:

Post a Comment