Tuesday, November 15, 2011

முதன் முதலாய்

முதன் முதலாய்
கணக்குப் போடக் கற்றுக் கொண்டனர்
அரேபியர்
முதன் முதலாய்
ஆண் இதயத்தை கூறு போட
 கற்றுக் கொண்டவள் நீ

அவளிடம்

என் உச்சந்தலை தொடங்கி
உள்ளங் கால் வரை
அவள் தான் இருக்கிறாள்
இதயத்தை தவிர
அது  மட்டும் அவளிடம் இருக்கிறது

வரட்சியாள்

பருவம் மாறிடும் -அவள் பார்வையால்
எனக்கென்றும்  மாறிடாது கோடை
வாடைக் காற்று வசந்தம்
அவள் மூச்சுக் காற்று வெப்பம்
ஈர இதயம் வறண்டதால்
அதன் வெடிப்பினுள் புகுந்தவள்
மாறாது எரிந்து கொள்வாள்
மாரியிலும் எரித்துக் கொல்வாள்
அவள் பெண்ணல்ல
என் வரட்சியாள் ......

ஒரு யாத்திரை

தெருவோர வசந்தம்
மருவி வந்த காதலின்று
அருவியாகி........

கால் கடுக்க
கண்மணியாள் தெருவோரம்
தரவையாகி .......

வலி தாங்கும் காதலிது
வழியெல்லாம்  விழி வைத்து
தொடர்கிறது

இரவு பகல் தெரியாமல்
இளமை வாழ்வு புரியாமல்
கரைகிறது

அடி காலும்  அணிகள் தேய
பாதணியகம் இலாபத்தில்
குவிகிறது

கருவிழியால் கைப்பிடிக்க
யுகக் காதல் யாத்திரை
தொடர்கிறது

கண்ணாமூச்சி

நீ வானத்துள் ஒளிந்திட்டாய்
என கூறியதுண்டு
நான் நம்பியதில்லை
பௌர்ணமி பார்த்த பின் புரிகின்றது
நிலவுக்குள் நீயும்
உனக்குள் நிலவும்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடுவது !!!!

நிம்மதி

அன்று கட்டிலில் புரண்ட போதும்
நிம்மதி வரவில்லை
நீ என்னை ஏற்காததை எண்ணி
இன்று கல்லறையில்  கிடக்கின்றேன்
            நிம்மதியாய்
உனக்காய் இறந்ததை எண்ணி

மௌனம்

நீண்ட மொழி
அழகிய மொழி
எழுத்தில்லா மொழி
சத்தங்கள் தோன்றா மொழி
ரசிப்பதற்கும் உணர்வதற்கும்
மட்டுமான மொழி
அவள் மௌனம்

கஸலிஷா

கற்களினை உரசி தீமூட்டக்
கற்று கொண்டனர்
ஆதி மனிதர்
இதயமிரண்டை உரசி தீமூட்டக்
கற்று தந்தவள் கஸலிஷா


கஸலிஷா

டாவின்சியின் மிகச்சிறந்த ஓவியம்
மோனலிசா
பிரம்மனின் மிகச் சிறந்த காவியம்
கஸலிஷா

வன்முறைக் காதல்

கன்னி உந்தன் மேனியில்
கண்ணி வெடிகள் அடக்கம்
கத்தி விழிப் பார்வையில்
படு கொலைகள் தொடக்கம்
புல்லட்டு சிரிப்பினில்
புயல்  காற்று அடிக்கும்

உன் மேனியினை ஆராய
குண்டிரண்டு தடக்கும்
பன்நாட்டு   ஏவுகணைகள்
உன் இடையிடையே வெடிக்கும்
ஆயுதக்கிடங்குகள் உன்
ஆடைக்குள்ளே முடக்கம்

சத்தமின்றி சில நேரம்
மௌன யுத்தம்  நடக்கும்
கண்ணீர்ப் புகைக் குண்டுகள்
உன் காதலிலே முளைக்கும்
முடியுமா ? எந்த யுத்தம் ?
வெற்றி என்று கிடைக்கும் ?

குருதியில் கருத்து

நண்பா
பாரதம் முடிந்த பாதையின் வழியே
பதினாறாம் நாள் யுத்தம் இன்றும் தொடரும்
பாதி ராத்திரி தூக்கங்கள் கெட்டு
பரிதவிக்கும் காலம் என்று முடியும்

பாவிகள் நாங்கள் நித்திரை விட்டு
பாலகர் அழுகை தேற்றிட விளைவோம்
பாசமாய் வளர்த்த பசுமாடு கன்றுகள்
பாழ் பட்டு போனதே விதியை நொந்தோம்

பாரதி பாடல்கள் பத்து கேட்டாலும்
பாமரர் நாங்கள் அச்சமின்றி அலைவோமோ?
பாணும் குழம்பும் கூட உண்ண வழிஇன்றி
பசிக்கொடுமை நம்மை பாடாய்ப்படுத்தும்

பிள்ளைகள் கதறல் பித்துக்கொள்ள செய்யும்
பிணவாடை மட்டும் தென்றலுடன் வீசும்
புண்பட்ட உடல்களிலிருந்து இன்றோ
ஊண் நீர் வழிகின்றது அருவிபோல்

தசையுருகி என்புகளின் வெளித்தரிசனம்
வயிற்று தசைமட்டும் பின் முதுகுடன்
காதல் செய்து கட்டியனைத்துக்கொள்கிறது
கடைவாயில் நீர் வடிந்து காய்ந்த சுவடுகள்

எழுதி வைக்க தாளின்றி சுவரில் எழுதுகின்றேன்
உண்ணவழி இன்றி எல்லோரும் உண்டதனால்
புதினப்பத்திரிகைகளுக்கு கூட இங்கு பஞ்சம்
புரியாத புதிரான என் வாழ்வோ
மரணத்தின் கீழ் தஞ்சம்

முடிவிலாப் பொருளாக இந்த யுத்தம் தொடரும்
என் சந்ததியாகினும் சுதந்திரகாற்றை
சுவாசிக்கும்
கண்ணீர் பட்டு கரைந்து விடக்கூடாது என்பதற்காக
இருக்கும் சொட்டு குருதியில் எழுதுகின்றேன்
என் கருத்தை .............

கனவுகள்

பெண்ணே உன்னை பற்றி கண்ணும் கனவுகளை
நான் காலைபொழுதிலேயே காண்கின்றேன்
காரணம் அவை எப்போதுமே
பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக

கனவுகள்

உன்னைப்பற்றி காணும் கனவுகள்
நாளை காலையில்
தீர்ந்து விடக்கூடாது என்பதற்காக
என் ஜென்மம் முழுக்க நான்
தூக்கத்தில் இருப்பது என் கண்கள் மட்டுமே அறியும்

கவிதைகள் பலவிதம்

கவிதைகள் பலவிதம்
நீளமான கவிதை அவள் மௌனம்
ஆழமான கவிதை அவள் மனது
அழகான கவிதை அவள் பெயர்
சோகமான கவிதை என் காதல்
விடையில்லாக் கவிதை அவள் காதல்
இருவரிக் கவிதை அவள் கண்கள்
இனிமையான கவிதை அவள் வெட்கம்
பாதிக் கவிதை நம் காதல்
மீதிக் கவிதை என் மரணம்

காய்ந்து போன என் இதயத்தில் 
அடிக்கடி
கலர் பூசிக் கொள்வேன் 
உன் விம்பங்களை 
என் விழித் தூரிகையில் தொட்டு